நான்கு வழிச் சாலையில் பைக் மற்றும் எலெக்டிரிக் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

கிணத்துக்கடவை அடுத்த கோவில்பாளையம், காளியண்ணன் புதூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி முருகேசன் (56) – ஜோதி (46). முருகேசன் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார். இந்த தம்பதியருக்கு சந்தியா (25) என்ற மகள் உள்ளனர். சந்தியாவுக்கு சந்தோஷ் என்பவருடன் திருமணமாகி 3 வயதில் ஒரு மகள், ஒரு வயதில் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் 5 பேரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக முருகேசன் – ஜோதி தம்பதி, மகள் சந்தியா அவரது இரண்டு குழந்தைகளுடன் கோவில்பாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனர். 5 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அதே பாதையில் எதிரே காமராஜர்புரம், கிருஷ்ணசாமி சாலையில் வசிக்கும் துரைராஜ் (60) எலெக்ட்ரிக் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் மற்றும் பேத்தி கனிஷ்கா உயிரிழந்தனர். தொடர்ந்து படுகாயங்களுடன் ஜோதி, சந்தியா மற்றும் ஒரு வயது ஆண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version