மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று (ஜூலை 3) ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அபாயகரமான நிலையில் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இன்று கோவை குற்றாலத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மழையின் தீவிரம் மற்றும் அருவியின் நீர்வரத்து ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சூழல் சீரடைந்த பிறகு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்த தகவல் வெளியிடப்படும் என்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
