தமிழகம் முழுவதும் இன்று பலரது மொபைல் போன்கள் திடீரென அதிக சத்தத்துடன் அதிர்ந்தன. திரையில் ‘அவசரகால எச்சரிக்கை’ (Emergency Alert) என்ற செய்தி தோன்றியதால், பொதுமக்கள் பலரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், இது மத்திய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை ஆகியவை இணைந்து நடத்திய ‘செல் பிராட்காஸ்ட் எமர்ஜென்சி அலர்ட்’ (Cell Broadcast Emergency Alert System) சோதனையாகும். இந்தத் தொழில்நுட்பச் சோதனையின் ஒரு பகுதியாகவே பொதுமக்களின் செல்போன்களுக்கு இந்த எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டது.

இயற்கைப் பேரிடர்களான சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம் அல்லது புயல் போன்ற அவசரக் காலங்களில், குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் தகவல்களைத் தெரிவிப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். செல்போன் நெட்வொர்க் குறைவாக இருக்கும் இடங்களிலும், இணைய வசதி இல்லாமலேயே இந்த எச்சரிக்கை ஒலி சென்றடையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் உயிர்ச் சேதங்களைக் குறைக்கவும், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்தவும் இந்தத் தொழில்நுட்பம் வருங்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி வெறும் சோதனை முயற்சி (Testing) மட்டுமே என்பதால், பொதுமக்கள் யாரும் தேவையற்ற முறையில் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. வெவ்வேறு மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் மற்றும் பகுதிகளில் இந்த அலர்ட் சிஸ்டம் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்யவே இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் மக்கள் இந்த எச்சரிக்கை செய்திகளைக் கண்டால், அவை சோதனையா அல்லது உண்மையான எச்சரிக்கையா என்பதை நிதானமாகப் படித்துப் பார்த்துச் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version