தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் அறிக்கைகள் என்பவை வெறும் வாக்குறுதிகள் மட்டுமல்ல, அவை மக்களின் அன்றாட வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ஒரு அங்கமாகவே மாறிவிட்டன.

முதலமைச்சராக பக்தவத்சலம் இருந்தபோது அரிசி பஞ்சம் தலைவிரித்தாடியது. ஏறக்குறைய விளைச்சல் வீழ்ந்து, வறுமை எல்லோர் வீட்டு வாசலையும் தட்டி நின்றது. 1967-ல் அறிஞர் அண்ணா அறிவித்த “ரூபாய்க்கு மூன்று படி அரிசி” என்ற வாக்குறுதிதான் இந்த நலத்திட்ட அரசியலுக்கு வித்திட்டது. அதாவது “ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம். ஒரு படி அரிசி நிச்சயம்” என்றார்.

அந்த அறிவிப்புக் குக்கிராம மக்களின் செவிகளில்கூட எல்லாம் வெள்ளம் போய் பாய்ந்தது. மக்கள் மகிழ்ச்சி பெற்று வாக்களித்தனர். அண்ணாதுரை முதலமைச்சரானார். ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின் கோயம்புத்தூருக்குத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

காலப்போக்கில், பசிப்பிணியைப் போக்கும் உணவில் தொடங்கிய இந்த பயணம், தற்போது நவீன வீட்டு உபயோகப் பொருட்கள் வரை நீண்டுள்ளது. குறிப்பாக 2006-ல் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்த “இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி” திட்டம், இந்திய அரசியலையே தமிழகத்தின் பக்கம் திரும்ப வைத்த ஒரு மைல்கல்லாகும்.

 

அன்றைக்கு கலர் டிவி என்பது ஆடம்பரமான பொருள். பலருக்கும் இது சாத்தியமில்லை. அரசு கஜானா காலியாகிவிடும். அதற்கான நிதி மாநில அரசிடம் இல்லை. இது நிறைவேற்ற முடியாத ஒரு பொய்யான அறிவிப்பு என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், அதை எல்லாம் வாக்காளர்கள் நம்பவில்லை. அந்தத் தேர்தலில் கருணாநிதி வென்றார். ஆட்சிக்கு வந்ததும் முதற்கட்டாக 30 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினார்.

இலவசமாக டிவி கொடுத்தபோது, தவறு எனப் பேசியவர்கள் பெண்களுக்கு இலவச பட்டப்படிப்புத் திட்டத்தைக் கருணாநிதி அறிமுகம் செய்ததைப் பற்றிப் பாராட்டியதில்லை. மு. கருணாநிதி செயல்படுத்திய இத் திட்டத்தால் பாலின சமத்துவத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலப் பட்டியலில் இடம்பிடித்தது. இதைப்போன்று 1996 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடும் வழங்கியது மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிதான். காமராஜர் ஆட்சிக்காலத்தில் இந்திய அளவில் 7வது இடத்திலிருந்த தொழில்துறை, திமுக ஆட்சிக்காலத்தில் 3வது இடத்துக்கு முன்னேறியது.

இந்தியாவிலேயே பட்டியலின மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டதும் திமுக ஆட்சியில்தான். 1971இல் மாபெரும் மாற்றம் திமுக ஆட்சியில் நிகழ்த்தப் பட்டது. அந்த ஆண்டு பஸ் போக்குவரத்தை முழுமையாக தேசியமயமாக்கினார் கருணாநிதி. இவரது ஆட்சிக்காலத்தில்தான் ஜெமினி சந்திப்பில் ‘அண்ணா மேம்பாலம்’ கட்டப்பட்டது. அன்றைய மதிப்பீட்டில் இதற்காகச் செலவு செய்ய 49.5 லட்சம் ஒதுக்கப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சிக்காலமான 1966வரை தமிழ்நாட்டிலிருந்த அரசுப் பல்கலைக்கழகங்களின் மொத்த எண்ணிக்கை மூன்று. ஒரு தனியார் ஒன்று. அரசுப் பல்கலைக்கழகங்களை 24 ஆக திமுக ஆட்சி உயர்த்திக் காட்டியது. அதேபோல் தனியார் எண்ணிக்கையானது 25 ஆக உயர்ந்தது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், 9 அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இயங்கி வந்தன.

தனியார் கல்லூரி ஒன்றே ஒன்று மட்டும் இருந்தது. திமுக ஆட்சியில்தான் ‘மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி’ என்ற குரல் எழுப்பப்பட்டது. அதனால் எம்.பி.பி.எஸ் கல்லூரிகளின் எண்ணிக்கை 2010இல் 17 ஆக உயர்ந்தது. பி.டி.எஸ் மற்றும் செவிலியர் போன்ற மருத்துவக் கல்லூரிகள் 33 பெருகியது.

‘பராசக்தி’ படத்தில் ஒரு வசனத்தைக் கருணாநிதி எழுதி இருப்பார். ‘தமிழ்நாட்டில் விதவைகள் இட்லி சுட்டு விற்பதுதான் தாசில் உத்தியோகம்’ என்று. அந்த வசனம் அவர்களின் சோக வாழ்வைக் கண்முன்னே காட்சிப்படுத்தியது. அந்த நிலைமை நன்கு உணர்ந்த இவர் ஆட்சிக்கு வந்தது ‘விதவைகள் மறுவாழ்வுத் திட்ட’த்தைக் கொண்டுவந்தார். இதன் மூலம் மறுமணம் செய்பவர்களுக்கு 1000 ரூபாய் அறிவித்தார்.

விதவைகளுக்கு இலவச பஸ் பாஸும் வழங்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். இப்படி இட்லியில் தொடங்கி, டைடல் பார்க், மெட்ரோ ரயில் வரை திமுக ஆட்சியால் தமிழ்நாடு பலபல வளர்ச்சிகளை அடைந்துள்ளது உண்மை.

காங்கிரஸ் ஆண்டபோது தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற ஒன்று இல்லை. எல்லாம் தேசிய கீதம்தான். மு.கருணாநிதிதான் தனது ஆட்சியில் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய ‘நீராருங் கடலுடுத்த’ பாடலை தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்.

இதற்கு எல்லாம் மகுடமாக திமுக ஆட்சியில்தான் நம் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டது. அதற்காக விட்டுக்கொடுக்காமல் போராடி வென்றார் அண்ணா.

அதனைத் தொடர்ந்து 2011-ல் அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற திட்டங்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை ஒரு “மக்களுக்கான பரிசுப் பெட்டியாக” மாற்றினார். 2016 மற்றும் 2021 தேர்தல்களில் கல்விக்கடன் ரத்து, மகளிருக்கு மாத உதவித்தொகை, நகைக்கடன் தள்ளுபடி எனப் பொருளாதார ரீதியான நேரடிப் பலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தற்போது 2026 தேர்தலிலும் இதே பாணி தொடர்கிறது. அதிமுக தனது அறிக்கையில் “இலவச குளிர்சாதனப் பெட்டி (Fridge)” மற்றும் மகளிருக்கு ரூ.2000 உதவித்தொகை போன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மறுபுறம், கருணாநிதி மறைவுக்கு பின் திமுக தலைமையில் ஆட்சியமைத்த ஸ்டாலினும், காலை உணவு திட்டம், மகளிருக்கு ரூ.1000 என பல நல்ல திட்டங்களையும் அறிவித்தார். இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்து.

ஆளுங்கட்சியான திமுக தனது 2026 தேர்தல் அறிக்கையில் மகளிருக்கான உதவித்தொகையை ரூ.2000 ஆக உயர்த்துவது, மாணவர்களுக்கு 35 லட்சம் லேப்டாப்கள், மற்றும் “இல்லத்தரசி கூப்பன்” என்ற புதிய திட்டத்தின் மூலம் வீட்டு உபயோகப் பொருட்களை மாற்றிக்கொள்ள ரூ.8000 மதிப்பிலான கூப்பன்கள் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, தேர்தல் அறிக்கைகள் என்பவை வெறும் ‘இலவசங்கள்’ அல்ல, அவை எளிய மக்களின் நுகர்வுத் திறனை உயர்த்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகவே பார்க்கப்படுகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version