சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன.
மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கடந்த சில மாதங்களாகவே வணிக சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 1ஆம் தேதி 19 கிலோ சிலிண்டர்களின் விலையை ரூ. 174 முதல் ரூ. 183.50 வரை குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் ரூ.3,283-ஆக இருந்த வணிக சிலிண்டரின் விலை ரூ.3,106 ஆகக் குறைந்தது
இந்தநிலையில், மாதத்தின் தொடக்க நாளான இன்று (ஆக.1) 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரூ.957.50 என்ற பழைய விலையிலேயே நீடிக்கிறது. இந்த விலை குறைப்பு உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் சிறு வணிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்து. இதன் காரணமாக டெல்லியில் ரூ.202-ம், கொல்கத்தாவில் ரூ.209-ம் விலை குறைந்துள்ளது. புதிய திருத்தத்தின்படி, கொல்கத்தாவில் 19 கிலோ எடையுள்ள வணிக கேஸ் சிலிண்டர் ரூ.2,872.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேற்காசிய மோதல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை (சவூதி ஒப்பந்த விலை) கடுமையாக உயர்ந்துள்ளது. எனினும், நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்குப் பெருமளவில் மானியங்களை வழங்கி சில்லறை விற்பனை விலையைக் கட்டுக்குள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
