நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், வாக்குப்பதிவை தொடர்ந்து மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்தநிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் சில தொகுதிகளில் திமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாகவே கோவையில் முகாமிட்டு வியூகங்களை வகுத்த அவர், சில குறிப்பிட்ட தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் சுணக்கம் காட்டியதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து மிகுந்த அதிருப்தியில் உள்ளாராம். குறிப்பாக, வாக்காளர்களுக்குச் சென்றடைய வேண்டிய ‘முக்கிய கவனிப்புகள்’ (பணம்) முறையாக விநியோகிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய, தற்போது குழு அமைத்து ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாகவே, தேர்தல் நாளன்று அவர் தனது சொந்த ஊரான கரூருக்குச் சென்று வாக்களிக்கக் கூட நேரமில்லாமல் கோவை தெற்கு தொகுதியிலேயே முகாமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கோவையின் கள நிலவரம் தமக்குச் சாதகமாக இல்லை என்பதைக் கணித்த அவர், வாக்குப்பதிவு முடியும் வரை அங்கேயே இருந்து களப்பணிகளைக் கண்காணித்துள்ளார். தமக்கு நெருக்கமான நிர்வாகிகளே பணிகளில் கோட்டை விட்டது குறித்து மிகுந்த கோபத்தில் இருக்கும் செந்தில் பாலாஜி, இது தொடர்பான விரிவான அறிக்கையைத் தலைமைக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version