ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது சரக்கு வாகனம் மோதியதில், தாத்தாவும் அவரது இரண்டு பேரக்குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (60). தையல் தொழிலாளியான இவர், இன்று காலை தனது மகன் மற்றும் மகளின் குழந்தைகளான அஜய் (9), குணஸ்ரீ (7), அஸ்வந்த் (4) ஆகிய மூன்று பேரப்பிள்ளைகளையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வழக்கம்போல அருகில் உள்ள தனியார் பள்ளிக்குக் கிளம்பியுள்ளார்.
இவர்கள் சித்தாஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று, எதிர்பாராதவிதமாக வேலுவின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாத்தா வேலு, பேத்தி குணஸ்ரீ மற்றும் 4 வயது பேரன் அஸ்வந்த் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு பேரன் அஜய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவேரிப்பாக்கம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
