ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்றைய தினம் மேட்டூர் அணை திறக்கப்படாததால் தமிழக விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், “காவிரி டெல்டா பாசனத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான குறுவை சாகுபடிக்கு, ஜூன் 12-ல் மேட்டூர் அணை நீர் திறக்கப்படுவது மிகவும் இன்றியமையாதது. ஆனால், உரிய நேரத்தில் நீரைத் திறக்காமல் விவசாயிகளை இந்த அரசு ஏமாற்றியுள்ளது.
ஏற்கனவே ரூ.10,000 கோடிக்கும் மேலாக உள்ள கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல், மிகக் குறைந்த தொகையை மட்டும் தள்ளுபடி செய்து விவசாயிகளை இந்த விடியா அரசு வீதிக்குத் தள்ளியுள்ளது. இப்போது நீரைத் திறக்காமல், ரூ.134 கோடிக்கு சிறப்புத் தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு நாடகமாடுகிறது.
கழக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த பொய்க்கால் குதிரை அரசு அதனை 18 மணி நேரமாகக் குறைத்துள்ளது. அதுமட்டுமன்றி, மாநிலம் முழுவதும் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பம்பு செட்டுகளைக் கூட இயக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
விவசாயிகளின் வலியையும் வேதனையையும் சிறிதும் உணராமல் வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிடும் இந்த திமுக அரசு, உடனடியாக மேட்டூர் அணையைத் திறந்து, பாசன நீர் கடைமடை வரை தொய்வின்றிச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
