உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக சார்பில் ”உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல நடைபயிற்சி சென்ற முதலமைச்சருக்கு லேசாக தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காலை 10.40மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் குடும்பத்தினர், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளனர். முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொள்வார்” என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.பரிசோதனை முடிந்து மீண்டும், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் திரும்புவார் என்றும் அங்கு 3 நாட்கள் ஓய்வில் இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version