திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்ணின் வழக்கில், அவரது கணவர் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான குப்புசாமி – சுகந்தி தம்பதியின் மகள் பிரீத்தி. 26 வயதான பிரீத்திக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது பிரீத்திக்கு 120 சவரன் நகை, ரூ.25லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் பிரீத்தியின் பங்காக ரூ.50லட்ச ரூபாய் பணத்தை பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறு, பிரீத்தியின் கணவர் மற்றும் மாமியார் தகராறு செய்துள்ளனர். இதனால் கடந்த 11-ம் தேதி பிரீத்தி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
மன உளைச்சலில் இருந்த பிரீத்தி கடந்த 5-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தான் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டி, உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். காவல்துறையினர் பிரீத்தியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவரது மரணத்திற்கு காரணமான சதீஸ்வர் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி இருந்தனர்.
அதன்பேரில் பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார் மற்றும் மாமியார் உமா ஆகியோரை நல்லூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து பிரீத்தியின் உடலை வாங்கி சென்றனர். அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள பிரீத்தியின் உடலுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.