சேலம் மாவட்டம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அனுபவமே இல்லாத விஜய், முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும் என்று கூறியிருந்தார்.
சினிமாவில் உச்ச நட்சத்திரம் என்றும் பாராமல், பெண்ணுக்குரிய மரியாதையை கொடுக்காமல் பொதுவெளியில் த்ரிஷா-விஜய் குறித்து கருத்து தெரிவித்த நயினார் நாகேந்திரனுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கருத்துக்கு பதில் தெரிவிக்காமல் இதுநாள் வரை மவுனம் காத்து வந்த த்ரிஷா, தற்போது தனது வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜ் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநில அரசியல் துறையில் உயர்ந்த நிலையை வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என்று என் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
த்ரிஷா எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல என்றும், அத்தகைய தொடர்பு கொள்ளும் எண்ணமும் இல்லையெனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களிலும் தொடர்ந்து தெரிவித்துவருவது போல, அரசியல் தொடர்பான விஷயங்களில் அவர் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறார்
தனது தொழில் மற்றும் திறமையால் மட்டுமே அடையாளப்படுத்தப்பட விரும்புகிறார்; எந்தவொரு அரசியல் சார்பு குற்றச்சாட்டுகளாலும் அல்ல. உயர்ந்த பொறுப்புப் பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும் போது பொறுப்புடனும் சமநிலையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷாவிற்கு தொடர்பில்லாத விஷயங்களில் அவரது பெயரை இழுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
