காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஜெகன் மூர்த்தி தரப்பு வாதம்:
கடத்தல் சம்பவத்திற்கும் ஜெகன் மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கில் காவல்துறை அவரை சேர்த்துள்ளதாகவும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சிபிசிஐடி விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
காவல்துறை தரப்பு வாதம்:
காவல்துறை தரப்பில், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜெகன் மூர்த்தியை சந்தித்த சிசிடிவி புகைப்படக் காட்சிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாகச் செயல்பட்டது ஜெகன் மூர்த்திதான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜெகன் மூர்த்திக்கும் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், தனது அலுவலக கார் இந்த கடத்தலில் பயன்படுத்தப்பட்டது என்பதை ஏடிஜிபி மறுக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு:
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறுவன் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலம் மற்றும் தொலைபேசி உரையாடல்களில் இருந்து, இந்த சம்பவத்தில் மனுதாரருக்குத் தொடர்பு உள்ளது என்பதற்கு ஆரம்பகட்ட முகாந்திரங்கள் உள்ளன எனக் கூறி, ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.