2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த நிதானத்தையும், அரசியல் வியூகத்தையும் கடைப்பிடித்து வருகிறார். இதுவரை இரண்டு கட்டங்களாக மொத்தம் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத் தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நிலவும் மௌனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 13 தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. இருப்பினும், முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமாரின் கோட்டையான ராயபுரம் தொகுதியைத் தவிர, மற்ற 12 தொகுதிகளுக்கும் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர் போன்ற முக்கியத் தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு இன்னும் நிலுவையில் இருப்பது தொண்டர்களிடையே ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சென்னையில் யாரை வேட்பாளர்களாகக் களமிறக்குகின்றன என்பதைப் பொறுத்தே, தங்களது ‘துருப்புச் சீட்டுகளை’ இறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியின் பலமான வேட்பாளர்களுக்கு இணையாகச் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலம் வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்த எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் சென்னையின் எஞ்சிய தொகுதிகளுக்கான இறுதிப் பட்டியல் விரைவில் வெளியாகும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version