கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதுபோல் சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் பயணிகளின் வசதிக்காக தனியார் ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சாப்பிடுகின்றனர். ஓட்டலில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஒட்டி கொட்டப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி மற்றும் வார விடுமுறையையொட்டி சென்னை  மற்றும் சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் தங்களது  சொந்த மாவட்டங்களை நோக்கி படையெடுத்தனர்.

இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்களின் கூட்டம் அலைமோதியது. மக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளையும், உணவு கழிவுகளையும், சேகரித்து அப்புறப்படுத்தும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக ஊழியர்கள் ஈடுபடவில்லை என தெரியவந்தது. குப்பைகள் மூட்டை மூட்டையாக குவிக்கப்பட்டுள்ளன.

இதனால் இந்த பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுவதால்,  பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.  எனவே, குப்பை கழிவை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version