கொடைக்கானலில், தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் 63-வது புகழ்பெற்ற மலர்க்  கண்காட்சியைக் காணத் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர்.

பரதநாட்டியமும் மலர் அலங்காரங்களும்

மலர்க் கண்காட்சியின் ஒரு பகுதியாக, சுற்றுலாத் துறை நடத்தும் கோடை விழாவின் 2-வது நாளான இன்று காலையில் வண்ணமயமான பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. இதன் தொடக்கமாக நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி, பூங்காவிற்கு வந்திருந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்தது.

இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியின் சிறப்பம்சமாக, ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்னேஷன் மற்றும் ரோஜா மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களின் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘பன்முகத் திறமையின் சின்னம் நீயடி’ என்ற பிரம்மாண்ட மலர் மங்கை சிற்பம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், காதல் ஜோடிகளைக் கவரும் விதமாக மலர்களால் ஆன இதய வடிவ ‘செல்ஃபி பாயிண்ட்’ மற்றும் குழந்தைகளைக் கவரும் கார்ட்டூன் உருவ பொம்மைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள்

பிரையண்ட் பூங்காவில் உள்ள 85-க்கும் மேற்பட்ட மலர் பாத்திகளில் பெப்ரோமியா, ஆந்தூரியம், ஜெரனியம், பெட்டுனியா, சால்வியா மற்றும் டெல்பீனியம் போன்ற லட்சக்கணக்கான அரிய வகை மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. வண்ண மலர்களின் அழகை ரசித்தபடி சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிக்களை எடுத்து மகிழ்ந்தனர்.

தற்போது வார இறுதி நாட்கள் என்பதால் கொடைக்கானலில் நிலவும் இதமான குளிர்ச்சியான காலநிலையை அனுபவிக்கவும், இந்த மலர் உலகத்தைக் காணவும் பிரையண்ட் பூங்காவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யக் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version