விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில், தேசிய திருநங்கை கூட்டமைப்பு சார்பில் ‘மிஸ் திருநங்கை 2026’ அழகிப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. கூவாகம் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. விழாவின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த 25 சாதனைத் திருநங்கைகளுக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் நடிகை அர்ச்சனா, கானா வினோத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் இந்தப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முதற்கட்டமாக 12 பேர் களமிறங்கிய நிலையில், அவர்களின் திறமை மற்றும் ஆளுமையின் அடிப்படையில் 5 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியின் முடிவில், சென்னையைச் சேர்ந்த திருநங்கைகளே முதல் மூன்று இடங்களையும் ஒட்டுமொத்தமாகத் தட்டிச் சென்றனர். அதன்படி, ஓமணா முதலிடத்தையும் (மிஸ் திருநங்கை 2026), சாய்ஸ்ரீ இரண்டாம் இடத்தையும், சுகி மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.
போட்டியின் இடையே நடைபெற்ற திருநங்கைகளின் நடன நிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் மெருகூட்டின. தங்களுக்குப் பிடித்த பாடல்களுக்குத் திருநங்கைகள் உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதைக் காணப் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர். கூவாகம் திருவிழாவின் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி நாளை திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து 29-ஆம் தேதி நாளை மறுநாள் புகழ்பெற்ற தேரோட்டம் மற்றும் தாலி அறுக்கும் சடங்குகளும் நடைபெறவுள்ளன.
