போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஶ்ரீகாந்த் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஶ்ரீகாந்த், கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இதே வழக்கில் கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி, எஸ்.ஹெர்மிஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை விசாரணைக்கு அழைத்த போது தாம் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்ததாக கூறினார். மேலும், மருத்துவ பரிசோதனையில் தாம் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாகவும் கிருஷ்ணாவின் கைது நடவடிக்கை அடிப்படை உரிமையை மீறிய செயல் என்றும் தெரிவித்தார். மேலும், எதனடிப்படையில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார் என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

நடிகர் ஶ்ரீகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தம்மிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளதாக கூறினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து, இருவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். தற்போது இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எஸ். ஹெர்மிஸ் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஶ்ரீகாந்த்தின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version