தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாசிச பாஜகவின் ஆணவம் வீழட்டும் என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், ” தொகுதிமறுவரை : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்!
பாசிச பாஜகவின் ஆணவம் வீழட்டும்!
அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
“தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் இல்லத்தின் வாசலில் தமிழ்நாடு போராடும்,தமிழ்நாடு வெல்லும் என்ற வாசனத்துடன் கோலம் போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவைக் கண்டித்து, இன்று தமிழ்நாடு முழுவதும் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது
