தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார்.அதிமுக – பாஜக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுந்தர்.சியிடம் அதிமுக களத்தில் இல்லை என்று தவெக விஜய் கூறியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர்.சி, “விஜய் சார் மேல அன்பும், மரியாதையும் எனக்கு உண்டு. என்னோட மனைவி அவரை தம்பி என்று தான் சொல்வார். அதேபோல் விஜய்யும் எனது மனைவியை அக்கா என்று தான் கூப்பிடுவார். அதனால் எந்த வகையிலும் விஜய் மற்றும் அவரது கட்சியை, அவரது வேட்பாளரை பற்றி விமர்சிக்க நான் தயாராக இல்லை. ஆனால் மதுரை மத்திய தொகுதியை பொறுத்தவரை உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் தான் போட்டி.” என்றார்.
தொடர்ந்து பேசிய சுந்தர்.சி, “என்னை ஆதரித்து குஷ்பூ பிரச்சாரம் செய்ய வருவார். சினிமாவில் கடந்த 30 வருடங்களாக பல வெற்றிகளை பார்த்துவிட்டேன். இனி மாதத்தில் 15 நாட்கள் மதுரையில் தான் இருப்பேன். எனது அடுத்தகட்ட நகர்வு தேர்தல் வெற்றியை பொறுத்து தான் இருக்கிறது. திமுக மீதான எதிர்ப்பு அலை எனக்கான வெற்றியை பெற்றுத்தரும். மதுரை மத்திய தொகுதி மக்கள் எனக்கு வெற்றிக்கனியை கொடுப்பார்கள்” என்று பேசியிருக்கிறார்.

