தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் தமக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்த அவர், இன்று சென்னை தி.நகரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தனியரசு தனது ஆதரவாளர்களுடன் விரைவில் தவெக-வில் இணைய உள்ளதாகவும், அவருக்குக் கொங்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியான காங்கேயம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் திடீர் திருப்பம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வியூகத்தை அதிரடியாக மாற்றி வருகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் சுமார் 3 முதல் 5 தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. அதன் ஒரு பகுதியாகவே, பிற கட்சிகளிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஏற்கனவே திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிலையில், தற்போது தனியரசுவும் விலகி தவெக பக்கம் சாய்வது ஆளுங்கட்சிக்குச் சவாலாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version