ஈரான் மீது கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடன் எவ்வித உடன்படிக்கையும் (Deal) செய்துகொள்ளாமலேயே அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்றும், ஈரானின் அணு ஆயுதக் கனவு முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஈரான் இனி அணு ஆயுதங்களை வேகமாக உருவாக்க முடியாத அளவுக்கு அந்நாட்டை “கற்காலத்திற்கு” (Stone Age) தள்ளிவிட்ட பிறகே அமெரிக்கா அங்கிருந்து கிளம்பும் என்று டிரம்ப் மிகக் காட்டமாகத் தெரிவித்தார். ஈரானின் ராணுவக் கட்டமைப்பு 100% அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர், இன்று இரவு 9 மணிக்கு (அமெரிக்க நேரம்) போர் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்கா ஏற்காது என்று டிரம்ப் கூறினார். அது நமக்கானது அல்ல. அது பிரான்சுக்கானது. அந்த நீர்வழிப்பாதையைப் பயன்படுத்தும் எவருக்கானதோ அவர்களுக்கானது அது,” என்று கூறிய அவர், “நாம் இதைச் செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை,” என்றும் மேலும் கூறினார்.

