தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வரவிருக்கும் வேளையில், நேரம் கிடைத்தால் தமிழகத்திற்கும் ஒரு குறுகிய காலப் பயணம் மேற்கொண்டு முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தனது நண்பர் விஜய்யை, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்தியுள்ளார். தமிழக மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் எதிர்காலத்திற்காகவும் முதல்வர் விஜய் திறம்படச் செயல்படத் தேவையான வலிமையும் ஞானமும் கிடைக்கப் பிரார்த்திப்பதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, எனது நண்பரும் தமிழக முதல்வருமான சி. ஜோசப் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினேன். வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காகவும் நான் இந்தியா வருகிறேன். அந்தப் பயணத்தின் போது, நேரம் அனுமதித்தால் தமிழகத்திற்கு ஒரு குறுகிய காலப் பயணம் மேற்கொள்வேன் என்றும் அவரிடம் தெரிவித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த மே 12 அன்று முதல்வர் விஜய்க்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்த மலேசியப் பிரதமர், “பல ஆண்டுகளாகத் தனது ரசிகர்கள் திரையில் ஊழல் அரசியல்வாதிகளை வீழ்த்துவதை ரசித்துப் பார்த்த நிலையை மாற்றி, தற்போது நிஜ வாழ்க்கையில் அதைவிடப் பெரிய பொறுப்பை மக்கள் விஜயிடம் ஒப்படைத்துள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு முதல்வர் விஜய்யும், மலேசியா மற்றும் தமிழகத்திற்கு இடையே உள்ள கலாச்சார, வரலாற்று உறவுகளை மேம்படுத்தத் தயாராக இருப்பதாகத் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.

தற்போது இரு தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தத் தொலைபேசி உரையாடல் மற்றும் மலேசியப் பிரதமரின் தமிழக வருகை குறித்த அறிவிப்பு, உலகத் தமிழர்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version