செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரமாக நிறுத்தப்பட்ட டாராஸ் லாரியை மர்மநபர் ஒருவர் கடத்தி சென்றார். அப்போது தடுக்க முயன்ற போக்குவரத்து காவலர் முருகன் கடத்தப்பட்ட லாரியில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு லாரியில் தொங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஒரு வழியாக மறைமலைநகர் சிக்னலில் சாலையோர பேரிகாட்டில் மோதி லாரி நிறுத்தப்பட்டது. லாரியின் உள்ளே இருந்த ஓட்டுநரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நிழலை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் என்பதும், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதனால் சுபாஷை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டு இருந்த நிலையில், பொதுமக்கள் தாக்கியதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த சுபாஷிற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக படுக்கையில் இரண்டு கை மற்றும் கால்களில் துணியால் கட்டப்பட்ட நிலையிலும், 5 போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version