சென்னை அண்ணாசாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்தின் 4, 5, 7 மற்றும் 10 ஆகிய தளங்களில் இருந்து, நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 கணினி ஹார்டு டிஸ்க்குகள் (Hard Disks) திருடப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேரில் ஆய்வு நடத்திய சில நாட்களிலேயே, மே 16-17 வார இறுதி நாட்களில் இந்தத் துணிச்சலான சதி அரங்கேறியுள்ளது.
துறை அதிகாரிகளின் துணையோடு சதியா?
மின்சாரத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள், குறிப்பாக ₹397 கோடி மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் குறித்து சிபிஐ (CBI) விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய முகமைகளும் 2021-2023 காலகட்ட மின்வாரிய டெண்டர்களை ஆய்வு செய்து வரும் வேளையில், இந்தத் திருட்டு நடந்துள்ளது. முக்கியமாக, இந்தத் துறைப் பிரிவுகளில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு அகற்றப்பட்டதாகக் கூறப்படும் தகவல், இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகளின் நீண்டகாலக் கூட்டுச் சதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
பசுமை ஆற்றல் கழகத்தின் (TNGECL) தலைமை நிதி அதிகாரி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கும், இந்த ஹார்டு டிஸ்க் திருட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தனது முதற்கட்ட சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் கேள்வி
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் லஞ்ச ஊழல்களையும் முறேகீடுகளையும் மூடிமறைக்கவும், தவறிழைத்தவர்களைக் காப்பாற்றவுமே இந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளனவா?
இதனைத் தடுக்கத் தவறிய தற்போதைய தவெக அரசு, மறைமுகமாக முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல் முகமூடியைக் காக்க முயல்கிறதா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
தற்போது சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
