தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில் ஆட்சியை தக்கவைக்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிக்க அதிமுக, பாஜக கூட்டணியும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற உத்தேச பட்டியல் கூட வெளியாகாத நிலையில், 234 தொகுதிகளுக்கு 72 தேர்தல் பொறுப்பாளர்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்தார்.

இதில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம், காரைக்குடி ஆகிய 6 தொகுதிகளின் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. அதிமுகவுடனான கூட்டணி உள்பட பாஜக தேசிய மற்றும் மாநிலத் தலைமையின் பல்வேறு முடிவுகளால் அண்ணாமலை தொடர் அதிருப்தியில் இருந்ததாக தகவல் பரவிய நிலையில், 6 தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக நியமித்தது அவரை அதிருப்தியில் உச்சத்திற்கு தள்ளியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தொடக்கம் முதலே மோதல் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், மாநிலத் தலைவராக இருந்த தன்னை குறுகிய வட்டத்திற்குள் அடக்கியதால் தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அண்ணாமலை விலகியதாக கூறப்படுகிறது. அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்தார். அதில், தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் பணிகளை செய்யமுடியவில்லை என அண்ணாமலையே விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

இந்தநிலையில் மீண்டும் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அதாவது தமிழகம் முழுவதும் 24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்துவதற்கான பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது., இது எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. செய்தியாளர்கள் வாயிலாகவே நயினார் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version