சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஒரு சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை அறிவிக்காமல் உள்ளனர். தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் என்ன முடிவு செய்ய போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் கூட்டணி குறித்து தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கடந்த 3ம் தேதியே அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் கட்சிகள், பிரேமலதாவின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இதனால், கூட்டணி குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஒருபுறம் கூட்டணியை அறிவிக்காததால் தேமுதிக நிர்வாகிகளே பிரேமலதா மீது அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இப்படியிருக்கையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்றுமுதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று விருப்பமனுக்களையும் நிர்வாகிகள் பெற்றுச்செல்கின்றனர். இருப்பினும் கூட்டணி குறித்த வியூகங்களுக்கு மத்தியில், பொறுமையாக ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று பிரேமலதா கூறிவருகிறார்.
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சிலர் அதிமுக – தேமுதிக கூட்டணி பற்றி கேட்டதற்கு, பிரேமலதா 14 தொகுதிகளை கேட்பதாகவும் இதனால் கூட்டணி கணக்கு வேலைக்கு ஆகாது எனவும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே கூறியதாக தகவல் கசிந்துள்ளது. எனவே, இதனை அறிந்த தேமுதிக தரப்பு தற்போது திமுக அல்லது தவெக ஆகிய இரு ஆப்ஷன்களை மட்டுமே வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
