அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme) செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன. வருகிற 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன.

இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்தது. அதன்படி, நேற்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலுவுடன், அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார். ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்புகளையும் தனித்தனியாக அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டமைப்புகளின் தலைமை நிர்வாகிகள் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஓய்வூதியம் குறித்த நல்ல புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அது என்னவிதமான ஓய்வூதியம்? என்பதை முதலமைச்சர்தான் தெரிவிப்பார். அதன் பிறகு அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி ஆலோசித்து முடிவு செய்துவிட்டு, பின்னர் எங்களின் அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும், கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும். 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும். பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும்.

Tamil Nadu Assured Pension Scheme – TAPS செயல்படுத்தப்படும். ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும். பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும். ஓய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version