சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியதில், சாலையில் நின்று கொண்டிருந்த 5 பேர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிங்கம்புணரி மேல தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் கார், மேலத்தெரு பகுதியிலிருந்து சந்திவீரன் கூடம் நோக்கி அதிவேகமாக வந்துள்ளது. மேலூர் சாலைக்குத் திரும்ப முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த சுமதிபுரத்தைச் சேர்ந்த வடிவேல், மனப்பட்டியைச் சேர்ந்த ஜீவா, அங்குள்ள தேநீர்க்கடைக்கு வெளியே நின்றிருந்த கீழத்தெருவைச் சேர்ந்த தையல் கலைஞர் வடிவேல், அவரிடம் பேசிக்கொண்டிருந்த வேளார் தெருவைச் சேர்ந்த மீனாட்சி மற்றும் அவரது மகன் நவீன் ஆகிய 5 பேர் மீது கார் பலமாக மோதி, அவர்களைத் தூக்கி வீசியது. அத்துடன் நிறுத்தாமல், அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது மோதி, அதை உடைத்துக்கொண்டு கார் நின்றது.

விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்களும் வியாபாரிகளும், உடனடியாகப் படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், தலையில் பலத்த காயமடைந்த மீனாட்சி, கையில் முறிவு ஏற்பட்ட அவரது மகன் நவீன் மற்றும் தையல் கலைஞர் வடிவேல் ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிங்கம்புணரி காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய காரின் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, கார் மோதி 5 பேர் தூக்கி வீசப்படும் இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை உலுக்கியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version