சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில், திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார், காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்தார். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை சிவானந்தா சாலையில் ஜூலை 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரி த.வெ.க தரப்பில், நீதிபதி வேல்முருகன் முன் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, இன்று பிற்பகல் விசாரிக்க என்ன அவசரம் உள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு, ”தமிழகத்தில் இந்த ஆட்சியில் இதுவரை 23 விசாரணை மரணங்கள் நடந்துள்ளதாகவும், அதை கண்டித்து ஆர்ப்பாட்டம்” நடத்த உள்ளதாகவும் த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய நீதிபதி, ”நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு பதில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். குற்றம் செய்யாதீர்கள்; மனைவியை கொடுமைப்படுத்தாதீர்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இன்னும் ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள் தான் நடைமுறையில் உள்ளன. முதலில் அதை திருத்தக் கூறுங்கள்” என தெரிவித்தார்.

பின்னர், மனு எண்ணிடப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்கும்படி அறிவுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version