கலை, இலக்கிய விருதுகளில் அரசியல் குறுக்கீடு ஆபத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026 – 4 ஆம் பதிப்பு, (CIBF 2026) நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட்டு, விழாவில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கர்நாடக எழுத்தாளரும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளருமான பானு முஷ்டக் மற்றும் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளிக்கல்வித்துறை யின் கூடுதல் தலைமை செயலாரும், சென்னை பன்னாட்டு புத்தக திருவிழாவின் ஒருங்கிணைப்பாளருமான சந்திரமோகன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு பெற்றது.
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பாக 44 நூல்களும் பிற துறையின் சார்பாக 40 நூல்கள் என 84 நூல்கள் தமிழ் மொழியில் இருந்து பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திசைதோறும் திராவிடம் தலைப்பில் 7 நூல்கள்
முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் என்னும் தலைப்பில் 13 நூல்கள்
இளந்தளிர் இலக்கியத் திட்டம் தலைப்பில் 10 நூல்கள்
நாட்டுடமை மற்றும் அரிய நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு தலைப்பில் 2 நூல்கள்
உலக இலக்கியம் உலக சிறுவர் இலக்கியம் தலைப்பில் 3 நூல்கள்
மிளிரும் தமிழ்நாடு தலைப்பில் 1 நூல்
உலகப் பொதுமறை திருக்குறள் 45 உலகமொழிகளில் மொழிபெயர்ப்பு தலைப்பில் 1 நூல்
ஐந்நூறு தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு தலைப்பில் 3 நூல்கள்
தமிழ்நாடு இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி தலைப்பில் 1 நூல்
Comparative Etymological Dictionary of Tamil and Indo European 2 உள்ளிட்ட தலைப்புகளில் உள்ள நூல்களை தமிழ் மொழியில் இருந்து உருது, தெலுங்கு, ராஜஸ்தானி, மராத்தி, மலையாளம், கன்னடா, ஹிந்தி, பெங்காலி, மலாய், அமெரிக்கன், மைதில், மாசிடோனியம், அல்பேனியம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கபட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்பு நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தின் கையெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதனை தொடர்ந்து சென்னை பன்னாட்டு புத்தக் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, மனித இனம் தனது சிந்தனைகளை பிறருக்கும் கொண்டு சேர்க்கும் கருவி தான் புத்தகம் வாசிப்பு மூலம் தமிழகத்தின்
ஒவ்வொரு வீடுகள் தோறும் அறிவு தீ பரவ வேண்டும் என தான் புத்தக திருவிழாக்களை நடத்துகிறோம். குறிப்பாக சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் புத்தக காட்சி நடைபெற்று வருகிறது.
சர்வதேச பன்னாட்டு புத்தக காட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு முதலமைச்சராக மட்டும் அல்ல புத்தகம் வாசிப்பாளராக பெருமையாக உள்ளது என தெரிவித்தார். ஏற்கனவே நந்தனத்தில் புத்தக காட்சி செல்கிறது. அப்போது இந்த சர்வதேச புத்தக காட்சி எதற்கு என கேட்பார்கள் அவர்களுக்கு எல்லாம் சொல்கிறேன்.
இந்த சர்வதேச புத்தக காட்சி மொழி பெயர்ப்பு, பதிப்பகம் பரிமாற்றம் பல நாடுகளுக்கு இங்குள்ள புத்தங்களை கொண்டு போய் சேர்ப்பது முக்கியத்துவமாக உள்ளது. அதனால் இந்த புத்தக காட்சி நடந்தப்படுகிறது என கூறினார்.
உலக நாடுகளில் நடப்பது போல் பன்னாட்டு புத்தக காட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என ஆசைபட்டேன் அது நிறைவேறி உள்ளது. நமது சிந்தனைகள் எழுத்துக்கள் பல நாடுகளுக்கும் சென்று சேர வேண்டும் என ஆசைப்பட்டேன். உலகின் உயரிய சிந்தனைகள் நம் மக்களுக்கும் வந்து சேர வேண்டும் அதற்காக இந்த சர்வதேச புத்தக காட்சி நடத்தப்படுகிறது என தெரிவித்தார் மேலும் இந்த சர்வதேச புத்தகக் காட்சியில் சுவாரசியமான உரையாடல்களும் இந்த பன்னாட்டு புத்தக காட்சியில் அரங்கேறி உள்ளது. அதற்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் தேசிய அளவில் விருதுகள் வழங்கப்படும் . தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் வெளியாகிற தலைசிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும். விருது உடன் ஐந்து லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
