திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வது குறித்து சிபிசிஐடி போலீஸார் சட்ட ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கை காஞ்சிபுரம் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஐபிஎஸ் அதிகாரியான ஏடிஜிபி ஜெயராம் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அவரது மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

இதனால், சிபிசிஐடி போலீஸார் பூவை ஜெகன் மூர்த்தி மீது அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் அடிப்படையில், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக சிபிசிபிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, பூவை ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், பூவை ஜெகன் மூர்த்தி அடுத்தகட்டமாக முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version