பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக பாமக தலைவர் அன்புமணி – நிறுவனர் ராமதாஸ் இடையேயான முரண்பாடு, தேர்தலுக்குள் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இருதரப்புமே தேர்தல் முடிவை நான்தான் எடுப்பேன் என உறுதியாக இருப்பதே மோதல் நீடிப்பதற்கு காரணம். இந்தச் சூழலில் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அந்த வகையில் அன்புமணியை பாஜக- அதிமுக கூட்டணி தேர்வு செய்துள்ளது.
இதனால், கொதிப்படைந்து போய் உள்ள ராமதாஸை திமுக கூட்டணியில் இணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாமகவைப் பொறுத்தவரை இந்த தேர்தல் களம், இரு தரப்புக்குமே, கட்சி யார் கையில் உள்ளது என்பதை தெளிவுபடுத்துவது தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், விசிக உள்ளே இருப்பதால் திமுக கூட்டணிக்குள் வரக்கூடிய வாய்ப்பு இருக்குமா எனவும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதே சமயத்தில், தவெக தரப்பிலிருந்தும் பாமகவுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. எப்படியும் தனித்துச் செல்வதைக் காட்டிலும் ஏதோ ஒரு கூட்டணியில் இடம்பெறுவதையே ராமதாஸ் விரும்புவதாகவும், திமுக கூட்டணியே முதல் விருப்பம் என்று ராமதாஸ் தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன,
இப்படியிருக்கையில், திருமாவை திமுகவின் சமாதானம் செய்து வருகிறார்களாம் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இதில் உடன்பாடு இல்லாததால் ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என திருமா, திமுக தலைமையிடம் சொன்னதாக கூறப்படுகிறது. அதே சமயம் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுமா எனவும் தவெக கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
