அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயிரிழக்கும் வீரருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக-அதிமுகவினர் இடையே பெரும் போட்டி நிலவிவருகிறது. ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் தொகை மாதம் ரூ.2000 வழங்கப்படும், பெண்களை போலவே ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
இந்தநிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதிக்குள்பட்ட சாலப்பாளையத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும். காளைகளின் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
ஏற்கனவே சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் பொங்கல் பண்டிகையின்போது அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
