1962-ல் மாநிலங்களவையில் தனது கன்னிப்பேச்சில் I belong to the Dravidian stock என்றார் பேரறிஞர் அண்ணா. அந்த ஒரு வார்த்தைக்கே ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் அதிர்ந்து போனதை அவைக்குறிப்புகளில் காண்கிறோம். அன்றுமுதல் இன்றுவரை திராவிடம் என்றாலே வடஇந்தியா ஒவ்வாமையுடன் அணுகுவதையும், தென்னிந்தியாவிலேயே கூட புரிதல் இல்லாத நிலைமையும் தான் காணப்படுகிறது.
இன்று உலக அளவில் கம்யூனிசம், சோஷலிசம் போன்ற சித்தாந்தங்கள் பரந்து விரிந்திருக்கிறது என்றால் அது உயர்கல்விக் கூடங்களில், ஆய்வுத் தளங்களில் மீண்டும் மீண்டும் பயிலவும் விவாதிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டதால் தான். அந்த சித்தாந்தங்களை எதிர்ப்பவர்கள் கூட அதனை பல்கலைக்கழங்களில் பாடமாக பயில வேண்டிய ஒரு சூழல் கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்டதே அவை இன்றளவும் பேசுபொருளாக இருக்கக் காரணம்.
ஆனால் நூற்றாண்டு கால சித்தாந்தம், பல்லாயிரம் ஆண்டுகால நிலப்பரப்பின் பெயராக இருந்தும் திராவிடம் என்றால் தமிழ்நாட்டைத் தாண்டி பலபேருக்கு தெரிவதில்லை. சுதந்திரத்திற்கு பிறகு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியை விடவும் பல துறைகளில் தமிழ்நாடு மேம்பட்டு இருப்பதற்கு காரணம் இங்கு நிலைபெற்ற திராவிட சிந்தனைகள் தான். சுயாட்சி, சுயமரியாதை, பகுத்தறிவு, சமஉரிமை, கல்வி போன்ற பல காரணிகள் தான் வடஇந்தியாவை விடவும் தமிழகம் செழித்து வளரக் காரணம்.
அப்படிப்பட்ட திராவிட சித்தாந்தத்தை சர்வதேச கல்விக்கூடங்களில் ஆய்வுநிலையில் ஒப்பிட்டு படிக்கவும் அவ்வாறு படித்தால் அதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்குமான பெருமுயற்சி ஒன்று சத்தமில்லாமல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் புரியும்படி சொல்வதென்றால்…
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பதென்பது இந்தியர்களின் கனவுகளில் ஒன்று. அந்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் வரலாறு, சித்தாந்தங்கள் குறித்து பல படிப்புகள் உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கொள்கை – கோட்பாடுகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு படிப்புகளை படிப்பார்கள். அதற்கு அந்தந்த நாடுகள் குறிப்பிடத்தகுந்த அளவில் பொருளாதார உதவிகளை வழங்கும்.
உலகின் வேறெந்த சித்தாந்தத்திற்கும் சற்றும் குறைவில்லாத திராவிடம் குறித்து ஆய்வு படிப்புகள் உண்டா என்றால் இல்லை?. ஏனென்றால் அதனை எடுத்து படிப்பதற்கும், ஆய்வு செய்வதற்குமான சூழல் அந்த பல்கலைக்கழங்களில் இதுகாறும் ஏற்படுத்தப்படவில்லை. இதனை மாற்றும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகனும் தொழில்நுட்ப தொழில்முனைவோருமான சபரீசனும் அவரது மனைவியும் கல்வியாளருமான செந்தாமரையும் இணைந்து திராவிட சித்தாந்தம் குறித்து ஆய்வு படிப்பை, முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதாவது, தமிழ்நாட்டில் திராவிடம் எப்போது தோன்றியது, அதனால் தென்னிந்தியாவில் ஏற்பட்ட சமுதாய – பொருளாதார மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்த நிதிநல்கை உதவும். சமூகநீதி கொண்ட இந்த நீண்ட நெடிய இந்த பாரம்பரியத்தையும் சர்வதேச கல்வித்துறையையும் இணைக்கும் ஒரு மைல்கல் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு நவீன தமிழ்நாட்டிற்கான ஒரு பாதையை வடிவமைத்தது சமத்துவத்தை அடிப்படயாக கொண்ட திராவிட இயக்கம். இதிலிருந்து கிளைத்த அரசியல் சிந்தனை, பொருளாதார கட்டமைப்புகள் ஆகியவற்றை மையமாக கொண்டு முதுகலை ஆராய்ச்சி செய்யும் நிரந்தர முனைவர் பட்ட மாணவருக்கு நிதியுதவி அளிக்கப்படும். தொடர்ச்சியான ஆதரவையும் வழங்கும்.
தமிழ்நாட்டின் ஐந்து முறை முதலமைச்சராகவும், திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத சக்தியாகவும் விளங்கிய கலைஞர் கருணாநிதியின் நினைவாக, இந்த உதவித்தொகைக்கு கருணாநிதி உதவித்தொகைகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளியில் இந்த ஆராய்ச்சி படிப்பு முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப்பாதையைப் பற்றிய உலகளாவிய புரிதலுக்கு விரிவுபடுத்துவதை நோக்கமாக இது கொண்டுள்ளது.
“அரசின் கொள்கைகள் மூலம் ஒரு மாநிலத்தில் என்ன சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு ஊக்கமளிக்கும் மாதிரியை திராவிட அரசியல் உலகிற்கு வழங்குகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளித்த ஒரு இயக்கத்தின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதும், அதன் கதை உலகளாவிய கல்வி மற்றும் கொள்கை உரையாடல்களின் ஒரு பகுதியாக மாறுவதை உறுதி செய்வதற்கும் இந்த பரிசு உதவுகிறது. ஆராய்ச்சி மற்றும் உரையாடல் மூலம், திராவிட தாக்கம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் மதிப்புமிக்க பாடங்களை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று சபரீசனும், செந்தாமரையும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் திராவிட அரசியல், பொருளாதாரம் மற்றும் வரலாறு குறித்த ஆராய்ச்சியை ஆதரிக்கும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கருணாநிதி முனைவர் பட்ட உதவித்தொகை முன்னுரிமையாக வழங்கப்படும் என்பது இதன் கூடுதல் சிறப்பு..
இந்த அறிவிப்பு குறித்து கேம்பிரிட்ஜில் உள்ள மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டிம் ஹார்பர் கூறுகையில், “இந்த முக்கியமான படிப்புத் துறைகளின் எதிர்காலத்தை ஆதரிக்க சபரீசனும், செந்தாமரையும் தேர்வு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அடுத்த ஆண்டு முதல் கருணாநிதி அறிஞரை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
நவீன இந்திய வரலாறு மற்றும் அரசியல் சிந்தனையின் முன்னணி அறிஞரான பேராசிரியர் ஸ்ருதி கபிலா கூறுகையில் “இந்த நன்கொடை எதிர்கால சந்ததியினருக்கு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் திராவிட ஆய்வுகளை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல உதவும். கேம்பிரிட்ஜில் கருணாநிதியை கௌரவிக்க முடிந்ததில் நாங்கள் இக்குடும்பத்தினருக்கு மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
வருங்காலங்களில் தென்அமெரிக்கா, ஆப்ரிக்கா, சீனா போன்ற பல்வேறு நாடுகளைச் சார்ந்த இளம் மாணவர்கள் திராவிடம் குறித்து பயிலவும், தெரிந்து கொள்ளவும் ஒரு சர்வதேச வாய்ப்பை இந்த நிதிநல்கை ஏற்படுத்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது.
ஏன் வேண்டும் இன்பத் திராவிடம் என்பதை உலகம் அறிந்து கொள்ளட்டும்..