தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு நடவடிக்கையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்தநிலையில், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்த முரளிதரன் தன்னிச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை தனது ராசிக்கு மிகவும் உகந்த நாள் என்பதால், கட்சியின் அனுமதிக்காகக் காத்திருக்காமல் அவர் மனுத்தாக்கல் செய்ததாகத் தெரிகிறது. கட்சியின் ஒழுங்குமுறைக்கு முரணான இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சித் தலைமை உடனடியாகத் தலையிட்டுள்ளது.

இந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருதிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முரளிதரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், கட்டுப்பாட்டை மீறியும் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் வேட்புமனு தாக்கலுக்குத் தயாராகி வரும் பிற கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இதுவரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார். அவர் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய சனிக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய இரு தினங்களே இருப்பதால் இன்றைய தினம் எப்படி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version