நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இரு வேறு இடங்களில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தருவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த மணி என்ற கூலி தொழிலாளி சிறுமியை காவல் நிலையம் அருகில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியில் சிறுமிக்கு மணி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியதையடுத்து அவர்கள் மணியை தேடி உள்ளனர். அவர் கிடைக்காத சூழ்நிலையில் இன்று (ஜூன் 3) அதிகாலையில் மணியை கண்டுபிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதேபோல் குமாரபாளையம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு அவரது உறவினரின் மூன்றரை வயது பெண் குழந்தை சென்றுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு உடலில் தொந்தரவு இருந்ததையடுத்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் ரீதியாக குழந்தை துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்ததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணையில், வரதராஜ் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதனிடையே கைதானவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, காவல்நிலையம் முன்பு திரண்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரசத்தில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
