தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக்கணிப்பு முடிவுகள் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்குச் சாதகமாக இல்லை. Peoples Pulse, Peoples Insight, NDTV மற்றும் Matrize போன்ற நிறுவனங்களின் கணிப்புப்படி, நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட போதிலும், அக்கட்சியால் கணிசமான இடங்களைக் கைப்பற்ற முடியாது என்பது அக்கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், இந்தக் கருத்துக்கணிப்புகளில் ‘மற்றவை’ என்ற பட்டியலில் 0 முதல் 6 இடங்கள் வரை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவை ராமதாஸ் தலைமையிலான கூட்டணி அல்லது சசிகலா தரப்பு (அஇபுதமமுக) அல்லது சுயேச்சை வேட்பாளர்களுக்குச் செல்லக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, புதிய கட்சிகளின் வரவு மற்றும் இளைஞர்களின் வாக்குகள் சிதறியது நாம் தமிழர் கட்சியின் வெற்றியைப் பாதித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த தேர்தல்களில் வாக்கு சதவீதத்தை உயர்த்தி வந்த சீமானுக்கு, இந்த முறை இடங்களைக் கைப்பற்ற முடியாமல் போவது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்தக் கணிப்புகள் உண்மையானால், வரும் காலங்களில் சீமான் தனது அரசியல் வியூகத்தை மாற்றியமைக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “தனித்துப் போட்டி” என்ற தனது பிடிவாதமான கொள்கையைத் தளர்த்தி, மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்படலாம். எனினும், வரும் மே 4-ஆம் தேதி அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவரும் வரை எதையும் உறுதிபடக் கூற முடியாது என நாம் தமிழர் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சீமானின் அரசியல் பயணம் புதிய திருப்பத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version