தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக, சுமார் 500 கிலோ எடையுள்ள சிக்னல் மற்றும் சிசிடிவி கேமரா கம்பம் சாய்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் இந்த இரும்பு கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அலட்சியப்படுத்தப்பட்ட கோரிக்கைகள்:
போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பரபரப்பான தேவர் சிலை பகுதியில், போக்குவரத்தை சீர் செய்யவும், சம்பவங்களைக் கண்காணிக்கவும் சுமார் 30 அடி உயரமும், 500 கிலோ எடையும் கொண்ட இந்த இரும்பு கம்பம் நிறுவப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில காலமாக சிக்னல் விளக்குகள் மற்றும் கேமராக்கள் பழுதடைந்து செயல்படாமல் இருந்துள்ளன. இதை சீர் செய்ய வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விபத்தின் பின்னணி:
சிக்னல் கம்பத்தின் அடித்தளப் பகுதி துருப்பிடித்து சேதமடைந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில், போடிநாயக்கனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
நடுரோட்டில் சாய்ந்த கம்பம்:
நேற்று இரவு எட்டு மணியளவில், போக்குவரத்து நெரிசல் மிகுந்திருந்த வேளையில், பலத்த சூறைக்காற்று வீசியதால் எதிர்பாராத விதமாக 500 கிலோ எடையுள்ள சிக்னல் கம்பம் சாய்ந்து நடு ரோட்டில் விழுந்தது. இதில், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் முகப்புப் பகுதி சேதம் அடைந்தது.
அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்புரைச் சேர்ந்த லோகேஸ்வரி என்ற பெண்மணி, சிக்னல் கம்பத்தில் இருந்த விளம்பர போர்டின் மின் இணைப்பு வயர் பட்டு, மின்சாரம் தாக்கிய நிலையில் அதிர்ச்சியும், லேசான காயமும் அடைந்தார். அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மக்கள் கோரிக்கை:
அதிர்ஷ்டவசமாக, தேவர் சிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சிமெண்ட் தளம் சேதமடையவில்லை. உடனடியாக அங்கு கூடிய அப்பகுதியினர், சேதமடைந்த சிக்னல் கம்பத்தை கட்டிங் இயந்திரம் மூலம் அறுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ஏற்கனவே பலமுறை பயன்படாத நிலையில் உள்ள சிக்னல் மற்றும் கேமரா கம்பத்தை சீரமைக்கவோ அல்லது அகற்றவோ பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், அருகில் பயனற்ற நிலையில் உள்ள மற்றொரு சிக்னல் கம்பத்தையும், காவல் துறையினர் கூண்டையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.