தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நீடித்து வந்த இழுபறி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்க்கப் போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இந்த ஆலோசனையின் போது, கூட்டணியை உறுதிப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கத்தில் 41 தொகுதிகளைக் கேட்டு ஒற்றைக்காலில் நின்ற காங்கிரஸிடம், தற்போதைய அரசியல் சூழலை மு.க. ஸ்டாலின் விளக்கிக் கூறியுள்ளார். இறுதியாக, காங்கிரஸுக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க திமுக தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திடீர் உடன்பாடு காரணமாக, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விஜய்யுடன் இணையக்கூடும் என்ற யூகங்களுக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் மேலிடத்திற்கும் ஓரளவு திருப்தியை அளித்துள்ளதாகத் தெரிகிறது.

தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள காங்கிரஸ், தமிழகத்தில் திமுகவுடன் முரண்படுவது கூட்டணிக்குத் தேவையற்ற பின்னடைவைத் தரும் என மேலிடம் கருதுகிறது. ஒருவேளை காங்கிரஸ் ‘தவெக’ பக்கம் சென்றிருந்தால், அது தேசிய அளவில் கூட்டணிக்குள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சமரச உடன்பாட்டால், “இந்தியா கூட்டணியைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் விரைவில் கலைந்துவிடும்” என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version