மண்டபம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மண்டபம், ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசந்துறை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் மீன்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலங்கை கடற்படை கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version