ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு அனுமதி காலம் முடிவடைந்தும் கள்ளத்தனமாகச் செயல்பட்டு வந்த கல்குவாரியில், கனிம வளத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு 5 லாரிகளைப் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகள் மூலம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கற்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடமங்கலம் பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி காலாவதியான கல்குவாரி ஒன்று, அரசுக்குத் தெரியாமல் தொடர்ந்து இயங்கி வருவதாகக் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தக் குவாரியில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கனிம வளங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலின் அடிப்படையில், கனிம வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி பாறை கற்களை ஏற்றிக்கொண்டு வந்த 5 லாரிகளைக் கண்ட அதிகாரிகள், அவற்றை மடக்கிப் பிடித்தனர். அதிகாரிகளைக் கண்டதும் லாரி ஓட்டுநர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினரின் உதவியுடன் அந்த 5 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது, தப்பி ஓடிய லாரி ஓட்டுநர்கள் மற்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட கல்குவாரி உரிமையாளர்களைப் பிடிப்பதற்காகப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
