திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல் நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கந்தன் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 21 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 1988 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடம், கடந்த 2023 ஆம் ஆண்டில் பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வகுப்பறை சுவர்களில் ஆங்காங்கே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி, அருகில் உள்ள ஒரு  வீட்டில் அமர்ந்து அவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

கலைத்திருவிழா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றுள்ள திறமையான இந்த மாணவர்கள், தொடர்ந்து வீடுகளில் படித்து வருவது பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, பழுதடைந்த பள்ளி கட்டிடத்தைச் சீரமைத்து மாணவர்கள் மீண்டும் வகுப்பறைகளில் கல்வி கற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version