சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் இயக்கத்தில், நாளை (ஜூன் 1) முதல் புதிய கால அட்டவணை அமல்படுத்தப்பட உள்ளது.

ரயில்வே இயக்கக் காரணங்கள் மற்றும் எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய கால அட்டவணையின் முக்கிய அம்சங்கள்
தற்போது இயக்கப்பட்டு வரும் 212 மின்சார ரயில்களின் சேவைகள் எவ்விதக் குறைப்பும் இன்றி அப்படியே தொடரும். ரயில்கள் இயங்கும் நேரத்தில் மட்டுமே சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய அட்டவணைப்படி, அலுவலக நாட்களில் 212 ரயில்களும், வாராந்திர விடுமுறை நாட்களில் 190-க்கும் மேற்பட்ட ரயில்களும் இயக்கப்படும்.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று, காலை மற்றும் மாலை நேரங்களான நெரிசல் மிகுந்த நேரங்களில் (Peak Hours) ரயில்களுக்கு இடையேயான காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற சாதாரண நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

பயணிகள் அதிருப்தி

இந்த புதிய கால அட்டவணை குறித்து புறநகர் மின்சார ரயில் பயணிகள் தரப்பில் ஏமாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,”செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி வழியாக கடற்கரை வரை காலை நேர நெரிசலில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதால், வேலைக்குச் செல்லும் பயணிகள் போதிய சேவையின்றி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் ரயில்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த புதிய அட்டவணையில் கூடுதல் ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது” என்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version