சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்பவர் மானாமதுரை போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் என்பவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.
அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த அவர், தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்திருந்தார். இதன் அடிப்படையில் இன்றைய தினம் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு சிவகங்கை மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் காரைக்குடி டெக்னீஷியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்டது. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், நேரில் சென்று வழங்கினார்.
மேலும் தேளி வருவாய் கிராமத்தில் 3 சென்ட் என்ற அளவில் வீட்டு மனைப் பட்டாவானது, அஜித்குமாரின் தாயார் மாலதி வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் உடனிருந்தனர்.