இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கோவையில் ஒரே மேடையில் 50 ஜோடிகளுக்கு சீர் வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அரை பவுன் தாலி உட்பட பல்வேறு சீர்வரிசைகள் அறநிலையத்துறையால் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. திருமண தம்பதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
அதன்படி கோவையில் உக்கடம் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் சிரவை ஆதீனம், மாநகராட்சி துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மணமக்களின் உறவினர்கள் கோவிலுக்கு வந்து இருந்த மக்கள் அனைவரும்
மணமக்களை வாழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை உட்பட பல்வேறு சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சீர்வரிசைகளுடன் திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் புதுமண தம்பதிகள் தெரிவித்தனர்.