முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீர் சந்திப்பு மேற்கொண்டார். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பு நடைபெற்றது.

வைகோ-வுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் மீண்டும் வழங்கப்படாததால் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறலாம் என பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டது.

திமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றுள்ளோம். இன்று வரை அரசை எதிர்த்து சிறிய ஆர்ப்பாட்டம் கூட நாங்கள் நடத்தியது இல்லை. அறிக்கை கொடுத்ததில்லை. இத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்று சொல்லியது இல்லை. எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார். இந்த சூழலில் முதலமைச்சருடன் வைகோ சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

திமுக கூட்டணியில் மதிமுக இணைந்தபின்னர், மதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் திமுகவுக்குள் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக இந்தநிலை தான் நீடித்து வந்தது. ஆனால் கடந்தவாரம் 2021 சட்டமன்ற தேர்தலில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் நின்று தோல்வியடைந்த முத்துரத்தினம், திமுகவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

அதாவது பாஜக கூட்டணியில் மதிமுக 12 தொகுதிகளை கேட்பதாகவும், அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் கூறப்பட்டது. துரை வைகோ தலைமையில் இதற்கான முன்னெடுப்புகள் நடந்ததாக சொல்லப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே மதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி ஒருவரை தங்கள் பக்கம் இழுத்து திமுக அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. தேவைப்பட்டால் மேலும் பலரையும் எங்களால் இழுக்க முடியும் என்பதை சொல்லாமல் சொல்லி இருந்தது.

இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான வைகோவின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version