தென் மண்டல கவுன்சிலில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் தலைமைச் செயலாளர் சாய்குமார் இடம்பெற்றுள்ளனர்.
மத்திய அரசு அவ்வப்போது நடத்தும் தென் மண்டல கவுன்சில் (Southern Zonal Council) கூட்டங்களில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கவுன்சில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தென் மண்டல கவுன்சிலுக்கான தமிழக பிரதிநிதிகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு அவ்வப்போது கூட்டும். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
இந்தக் கூட்டங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள், சிறுபான்மையினர் நலன், எல்லைப் பகுதிகள் தொடர்பான பிரச்சினைகள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கமாகும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையின் மூலம், தென் மண்டல கவுன்சிலில் தமிழகத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
