கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் மற்றும் அவர்களின் பெயர்ப்பலகையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், மனிதநேயத்துடன் தங்களது உறவினர்களின் உறுப்புகளைத் தானம் செய்த குடும்பத்தினரின் செயலைக் கண்டு நெகிழ்ச்சி தெரிவித்தார். மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு இவர்களே சாட்சி எனக் குறிப்பிட்ட அவர், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், தற்போதைய தேவையை விட உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாமக்கல் பகுதியில் நடந்த சிறுநீரகத் திருட்டு விவகாரத்திற்குப் பிறகு, உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சிலரின் தவறான செயலால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் பாதிக்கப்படக் கூடாது என எச்சரித்தார்.
மேலும், இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களுக்கும் கடைக்காரர்களுக்கும் அவசர கால முதலுதவிப் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதால் டெல்லியில் தேசிய விருது பெறவுள்ளதாகவும், அந்த விருதினை உடல் உறுப்பு கொடையாளர்களின் குடும்பத்தினருக்குச் சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், கோவை அரசு மருத்துவமனையில் நிலவும் சில குறைகள் நீண்ட கால நிர்வாகச் சீர்கேடுகளால் ஏற்பட்டவை என்றும், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பின் அவற்றைச் சீரமைக்கத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தார். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதோ அல்லது பணம் கேட்பதோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், அரசு ஊழியர்கள் இதனைச் சேவையாகக் கருத வேண்டும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கடுமையாக எச்சரித்தார்.
