கார்ல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் இந்தியாவின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் சிதைப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியுள்ளார். கம்யூனிசத்தின் தந்தை என போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ரவியின் இந்த பேச்சு கடும் விமர்சனத்தையும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது.
எம்.எல்.ராஜா எழுதிய ‘கலியுக கல்வெட்டு’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நான் மாணவ பருவத்தில் இருந்த போது வீட்டில் பெரியவர்கள் சொல்லும் கதைகளை கேட்டிருக்கிறேன். ஆனால், அதே கதையை ஊரில் உள்ள சிலர் கூறும் போது, அது முரணாக இருந்தது. அதே கதையை புத்தகத்தில் படித்த போது, அது வேறு மாதிரியான அர்த்தத்தை கற்பித்தது.
அப்போது தான், அதில் முழுமையான உண்மை இருக்கிறதா? என்று சந்தேகம் எழுந்தது. ஒரு உதாரணத்தை சொல்கிறேன். ஆங்கிலேயர்களால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போதைய புத்தகங்கள் கூட என்ன சொல்கின்றன? பிரிட்டிஷ்காரர்கள் சிறப்பான ஆட்சியை தந்ததாக அவற்றில் கூறப்பட்டிருக்கின்றன.
சுதந்திரம் அடைந்த போது மகாத்மா காந்தியிடம் ஒரு பத்திரிகையாளர், “ஏன் சோகமாக இருக்கிறீர்கள்? அது தான் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதே..” என்று கேட்டுள்ளார். அதற்கு காந்தி, “ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் இருந்து சென்று விட்டார்கள். ஆனால், அவர்களின் மனநிலை நம் நாட்டில் இருந்து கொண்டே இருக்கும்” என கூறியிருக்கிறார்.
அது உண்மையும் கூட. சுதந்திரத்திற்கு பிறகும், ஆங்கிலேயர்களின் பிரதிநிதிகள் தான் இந்தியாவை ஆட்சி செய்தார்கள். கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? இந்தியாவுக்கு ஏகாதிபத்தியம் தான் தேவை எனக் கூறியிருக்கிறார். ஏனென்றால், இந்தியா ஒரு அடக்குமுறை கொண்ட நாடாக இருக்கிறதாம். இந்தியர்கள் பசுவையும், குரங்கையும் வழிபடுவதால், ஏகாதிபத்தியம் அவர்களுக்கு தேவை என கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கிறார்.
அதே போல, கார்ல் மார்க்ஸை பின்பற்றக் கூடிய நபர்கள், இந்தியாவின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியா தற்போது விழித்துக் கொண்டு விட்டது.
இன்றைய இளைஞர்கள் தங்களுடைய இலக்கை நோக்கி சரியாக சென்று கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் இன்றளவும் கலியுகம் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால், கல்லூரி புத்தகங்களில் அது ஒரு புனைவு கதையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. 900 கல்வெட்டுகள் நம்முடைய பாரத நாட்டையும் தாண்டி பல இடங்களில் கிடைத்துள்ளன. அவை தான் நம் வரலாற்றை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் நம்முடைய வரலாற்றை தேடி ஆய்வு செய்ய வேண்டும்” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
