தன் மீது அவதூறு கருத்து தெரிவித்ததற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவை விட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் சர்ச்சையானது.

நடிகை திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சி தலைவர் இப்படி பேசலாமா என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. சுதா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது கட்சிக்காரரும், திரைப்பட நடிகையுமான த்ரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில், பின்வருவனவற்றைப் பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:

எனது கட்சிக்காரரைப் பற்றி ஊடகங்களில் பரவி வரும் அருவருப்பான கருத்து குறித்து இந்த அறிக்கையை வெளியிடப்படுகிறது. மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை வெளியிடுவார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்கவில்லை என்பதையும், அவ்வாறு இருக்கவும் விரும்பவில்லை என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறார். மேலும், எனது கட்சிக்காரர் கடந்த காலங்களில் இருந்தது போலவே, அரசியலில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்.

எனது கட்சிக்காரர் எந்தவொரு அரசியல் செயல்பாட்டிலும் ஈடுபடாமல், தனது தொழிலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார். மிக முக்கியமாக, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது விமர்சனம் அல்லது விவாதப் பொருளாக மாற்றக்கூடாது என்பது பொதுவான நிலைப்பாடு. மேலும், உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் பொது விவாதத்தில் பொறுப்பையும், சமநிலையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனது கட்சிக்காரரின் பெயரை அவருடன் தொடர்பற்ற விஷயங்களில் இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “எந்த ஒரு தனி மனித விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதுமில்லை; நான் பேசியதுமில்லை. அன்றைய தினம் வாய் தவறி வந்த வார்த்தை. அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இது குறித்து என்னிடம் பேசினார். யாரேனும் இந்த விவகாரத்தில் வருத்தப்படுகிறார்கள் என்றால், என் வருத்தத்தை நான் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version